விழுப்புரம் மாவட்டம் 30.09.1993ம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புது மாவட்டமாக தோன்றியது. மீதி உள்ள பகுதி கடலூர் மாவட்டமாக மாறியது. விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்கில் கடலூர் மாவட்டமும் மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும் வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1777 தொடக்கப்பள்ளிகளும், 311 நடுநிலைப்பள்ளிகள், 150 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 உயர் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. உயர் கல்விக்காக இங்கு கலை, பொறியியல், ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகள் உள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த மாணவ, மாணவியர்க்கு அரசினர் தங்கும் விடுதியும் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல், சோளம், ராகி, கம்பு மற்றும் வரகு தானியங்களும், கரும்பு, நிலக்கடலை, மற்றும் பருத்தியும் பயிரிடப்படுகிறது.
செஞ்சிக்கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்களும், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். இந்த கோயில் செஞ்சியிலிருந்து 32 கி.மி. தூரத்தில் உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் விழாவில் மசான கொல்லை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். இங்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும், பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுவார்கள். திருக்கோயிலூர், திருவக்கரை புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.