ஆரம்ப காலத்தில் நீலகிரி மலை மைசூரை ஆண்ட கங்கை வம்சத்தினர் வசம் இருந்தது. ஆங்கிலேயர்கள் அதனை 1868ல் கோவையுடன் இணைத்தனர். 1882ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஒரு மாவட்ட அதிகாரியும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 1, 1882ல் ரிச்சர்ட் வெல்ஸ்வி பார்லோ என்பவர் மாவட்ட ஆணையர் பொறுப்பிலிருந்து முதல் மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் இந்த நீலகிரி மலைத்தொடர் தென்னிந்தியாவின் மிக முக்கிய மலைப் பகுதியாகும். உதகமண்டலத்தை தலைமையகமாக கொண்ட இந்த நீலகிரி மலை, கடல் மட்டத்திலிருந்து 2,286 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த பகுதியில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா கண்காட்சியகம், ஊட்டி ஏரி, தொட்டபெட்டா சிகரம், ராஜ் பவன், ஆதாம் அருவி, காமராஜ் சாகர் அணை, ரேடியோ தொலைநோக்கி மையம், பைக்கார ஏரி மற்றும் பல இடங்கள் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகின்றன.