தூத்துக்குடி “முத்து நகரம்” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடல் பரப்பில் முத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 நூற்றாண்டு வரை இது பாண்டிய மன்னராலும், 10ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களாலும் ஆளப்பட்டது. கி.பி.1658-ல் டச்சுக்கரர்களை தொடர்ந்து கி.பி.1732ல் போர்ச்சுக்கீசியர்கள் வந்தனர். பின்பு இது டச்சுக்கரர்களிடமிருந்து 1782ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
இந்த மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 20.10.1986லிருந்து புது மாவட்டமாக செயல்படுகிறது. தொடக்கத்தில் இதற்கு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றே பெயரிடப்பட்டது. பின்பு 1997 முதல் இது தூத்துக்குடி மாவட்டம் என பெயர் பெற்றது.
வ.உ.சிதம்பரனார் அவர்கள் கி.பி.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இந்திய சுதேசி கப்பல் கம்பெனியை தொடக்கிவைத்தார்.
இந்த மாவட்டத்தின் 70 சதவித மக்கள் உணவிற்காக நெற்பயிரையே நம்பியுள்ளனர். முக்கிய தானியமாக நெல், சோளம், கம்பு, வரகு, ராகி மற்றும் சாமை பயிரிடப்படுகிறது.
இங்குள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாற்று சிறப்புமிக்கது. கழுகுமலை என்ற இடத்தில் சமண மதத்தவரின் ஓவியம் மற்றும் சிற்ப்பங்கள் காணப்படுகிறது. இங்குள்ள பஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளது. எட்டயபுரத்திலுள்ள பாரதி மணிமண்டபம், நவ திருப்பதி மற்றும் வன திருப்பதி கோவில்கள் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.