புராணக்கதைப்படி, மதுரை மாவட்டம் கதம்பவனம் எனும் காடாக இருந்துள்ளது. ஒரு நாள் தனஞ்செயன் எனும் விவசாயி அந்த காட்டின் வழியே செல்லும் போது. கதம்ப மரத்தின் கீழ், தானாக தோன்றிய சுயம்பு லிங்கத்தை இந்திரன் வழிபடுவதை கண்டான். உடனே அதை அவன் அரசனுக்கு தெரிவிக்க, அரசன் குலசேகர பாண்டியன் அந்த காட்டினை சுத்தம் செய்து சுயம்பு லிங்கத்தை சுற்றி ஒரு கோயில் கட்டினான். அந்த இடத்திற்கு பெயர் சூட்டுகின்ற நாளன்று இறைவன் அங்கு தோன்றினார். அப்போது அவர் தலைமுடியிலிருந்து தேன் துளிகள் சொட்டியதால் மதுரை (இனிப்பை குறிக்கும் சொல்) என பெயர் பெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை மையமாக கொண்டே மதுரை மாநகரம் வளர்ந்துள்ளது. அரச வம்சங்களால் இந்த கோயிலும் நன்கு வளர்ந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயிலானது திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் மேலும் எழிலூட்டப்பட்டு நான்கு பிரம்மாண்ட நுழைவாயிலும் அமைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இதுவும் மதுரையின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. அழகர் திருகோயில் விஷ்ணுவின் கோயில்களில் முக்கியமான ஒன்றாகும். சோலைமலை மீது அழகான சூழலில் அமைந்துள்ள இந்த கோயில் அழகான சிற்பங்களையும் கொண்டுள்ளது. பழமுதிர்ச்சோலை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். மலை மீது ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இது சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.