தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803லிருந்து 20.01.1805ம் ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு:- பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம், கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது. 1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது, இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை எண். 1917ன்படி வருவாய் துறை தேதி: 31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பெருந்துறை மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு:- கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை. அரசு ஆணை நிலை எண். 617, 618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர், உடுமலைப்பேட்டை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம், பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பொழுது கோவை மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை மற்றும் இரண்டு வருவாய் மண்டலங்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளன.
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888ல் அமைக்கப்பட்டது. இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25,000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிம வளங்கள், கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
1. கோவை மாவட்ட சமயத் திருத்தலங்கள் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் ஈச்சனாரி விநாயகர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தண்டு மாரியம்மன் கோவில் பேரூர் சாந்தலிங்கர் திருமடம் சிரவணபுரம் கெளமார மடாலயம் கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம் புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் கிருஸ்துவ அரசர் ஆலயம் இம்மானுவேல் ஆலயம் அத்தார் ஜமாத் பள்ளி வாசல் ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல் குருத்துவார கோயில் (சிங்) ஜெயின் கோவில் போன்றவை முக்கிய சமய திரு தலங்களாக விளங்குகின்றன. 2. கோவை மாவட்ட வரலாற்று சிறப்பிடங்கள்:- தொல்பழங்கால ஓவியங்கள் வெள்ளருகம்பாளையம், வேடர் பாத்தி, சோமனூர் குமிட்டிபதி, பதிமலை ஆகிய ஊர்களின் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகள் உள்ளன. இக்குகைகளில் வெள்ளருகம்பாளைய குகை 400 அடி உயரத்தில் உள்ளது. மற்ற குகைகள் தரைப்பகுதியில் உள்ளன. இந்த ஓவியங்கள் கி.மு. 1,000 – கி.பி. 100 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை. வேட்டை காட்சிகள் சண்டை காட்சிகள், நடனக்காட்சிகள், தேர்வடிவம், கட்டிடங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அரசி, புத்தர், மைத்ரேயர் ஆகிய பொம்மைகள் கிடைத்துள்ளன. இங்குள்ள கோவில் கல்வெட்டுக்கள் இவ்வூரின் வரலாற்றை அறிய உதவுகின்றது. நாகேஸ்வரம் (சின்ன கோவில்), திருமலைக்கோயில், முட்டத்துஅம்மன் கோயில் ஆகிய கோயில்கள் பழமை வாய்ந்தவை. இங்கு நிலை பெற்றுருந்த கட்டிடங்கள் அழிந்துவிட்டன. அவை கி.பி 8ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. பேரூர் திருமுருகன் பூண்டி இராசக்கேசரிப் பெருவழி ஆனைமலை சமணப்பள்ளிகள் அமராவதி ஆற்றங்கரை மருதமலை போன்றவை முக்கிய வரலாற்று சிறப்பிடங்கள் ஆகும். 3. கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்:- வெள்ளியங்கிரி மலை ஆனைமுடி சிறுவாணி அணைக்கட்டு நொய்யல் அமராவதி ஆறு ஆழியார் போன்றவை சிறந்த சுற்றுலா தலங்கள் ஆகும்