மாண்புமிகு திருமதி.என். கயல்விழிசெல்வராஜ்
மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன்
மின்னஞ்சல் :
தொலைபேசி எண் :
C. விஜயராஜ் குமார் இ.ஆ.ப., ( அரசு செயலாளர் (FAC) )
தொலைபேசி 25672740
மின்னஞ்சல் parsec(at)tn.gov.in
திரு. டி.ஏ. வர்கீஸ், ஐ.சி.எஸ்., அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிருவாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அரசுத் துறைகளினிடையே மனித வளங்களை திறம்பட நிருவகிக்கும் வண்ணம், 1976ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஆறாம் நாள் பொதுத்துறையிலிருந்து சில பொருண்மைகளைப் பிரித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை உருவாக்கப்பட்டது.
பணியாளர்கள் மூலமாகவே ஒரு நிறுவனம் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் வியர்வையாலும் உழைப்பாலும், முயற்சியாலும் அது முன்னேற்றமடைந்து இலக்குகளை நோக்கிப் பயணித்து, நோக்கத்தை அடைந்து வெற்றி பெறுகிறது. இதுகாறும் இத்துறைக்குப் “பணியாளர் நிருவாகம்” என்ற பழம் பெயரே வழங்கப்பட்டு வந்தது. பணியாளர்கள் சமன்செய்து சீர்துாக்கும் துலாபாரங்கள் ; நேர்மையாக நிருவாகத்தை நடத்திச்செல்ல வேண்டிய கட்டளைக்கற்கள்; திறமையால் பளிச்சிட வேண்டிய வைரக்கற்கள்; அடுத்தவர்களை மதிப்பீடு செய்ய வேண்டிய எடைக்கற்கள்; ஏழைகளின் வாழ்வு முன்னேற உதவ வேண்டிய படிக்கற்கள்; அத்தகைய பணியாளர்கள் நிருவாகத்தின் மனித வளமாகக் கருதப்பட வேண்டும், நிறுவனத்தின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை என்ற பெயரை ‘மனிதவள மேலாண்மைத் துறை’ என்று 30.06.2021 அன்று மாற்றியமைத்திருக்கிறார்கள்.
மனிதவள மேலாண்மையில், நியமனம், பயிற்சி, மேம்பாடு, ஊக்கம் அளித்தல், நெறிமுறைப்படுத்துதல் போன்ற அனைத்துப் பணிகளும் அங்கங்களாக இருக்கின்றன.இவற்றைத் தமிழகத்தில் இருக்கிற அரசுப் பணியாளர்களுக்கு நிகழ்த்துகின்ற நிறுவனங்கள் அனைத்தும் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இத்துறையின் முக்கிய பணிகளை நான்கு தொகுதிகளாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்:-
(அ) சட்டபூர்வமானபணிகள்-சட்டங்களை நிருவகித்தல்:-
சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும், அரசு வழங்கும் சேவைகளுக்குமான இணைப்பு உயிரோட்டமான ஒன்று.இது, பரந்த செயல்பாட்டு எல்லைகளைக் கொண்ட அரசுப் பணிகளின் தரத்தின் மூலம் வெளிப்படுகிறது. எனவே,சட்டபூர்வ மற்றும் நிருவாக வரையறைகளை, முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையிலும் சமச்சீர் மரபை பேணிடும் வகையிலும் நிருவகிப்பதன் மூலம் அரசின் செயல்பாடுகளில் ஒழுங்குமுறை உறுதிப்படுத்தப்படுகிறது. இத்துறை தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 [தமிழ்நாடு சட்டம் எண். 14/2016] மற்றும் தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் எண்.33/2018) ஆகிய சட்டங்களை நிருவகிக்கிறது.
(ஆ) நிருவாகப் பணிகள்:-
அனைத்து அரசுத் துறை அலகுகளின் அன்றாட நிருவாகத்தில் பணிகள் மற்றும் ஒழுக்கம் தொடர்புடைய பின்வரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை இத்துறை உறுதி செய்கிறது. தற்போதுள்ள விதிகள் / ஒழுங்குமுறைகள், அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு, தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டு, நாளது தேதிவரையிலான திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பணியாளர்களிடையே பணி அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் இலக்குகள் வலியுறுத்தப்பட்டு தெளிவுப்படுத்தப்படுகிறது.
(இ) ஆலோசனை வழங்கும் பணிகள்:-
அரசுப் பணிகளில் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பராமரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலக அறிவுறுத்தங்களின் கீழ் பின்வரும் நேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நேர்வுகளில் மனிதவள மேலாண்மைத் துறையை தலைமைச் செயலகத் துறைகள் கலந்தாலோசிக்கின்றன:-
தமிழ்நாடு மாநிலப் பணிகள் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு காலிப் பணியிடமதிப்பீடு மற்றும் தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல்; அரசுப் பணியாளர்களின் பணி வரன்முறை மற்றும் தகுதிகாண் பருவ விளம்பல் நேர்வுகளில் வழிகாட்டுதல் தெளிவுரைகள் வழங்குதல்; அடிப்படை விதிகளில் தெளிவுரை வழங்குதல்; முதுநிலை திருத்தம் தொடர்பான கருத்துருக்களை ஆய்வு செய்தல்; சிறப்பு / தற்காலிக விதிகளை உருவாக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் நேர்வுகளில் ஆலோசனை வழங்குதல்; அரசுப்பணியாளர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த நேர்வுகளில் ஆலோசனை வழங்குதல்.
(ஈ) பயிற்சி:-
அரசுப் பணியாளர்களின் அன்றாட பணிகளிலும் அவர்கள் எதிர்காலத்தில் வகிக்கவேண்டிய பொறுப்புகளிலும் பணித்திறனை மேம்படுத்த, பயிற்சி அளித்தல் இத்துறையின் முக்கியமான செயல்பாடாகும். அரசுப் பணியாளர்கள் பணியில் சேரும்பொழுதே, அவர்களின் அடிப்படை திறனை வளர்த்துக் கொள்ளவும், குறிப்பிட்ட துறைகளில் அவர்களின் திறமையையும், மதிப்பையும் கூட்டவும், சவால்களை எதிர்நோக்கும் திண்ணம் கொண்டவர்களாக மேம்படுத்தவும், அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளான அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் பணியில் சேரும் போது அடிப்படைபயிற்சி; பணியில் உள்ள அரசுப்பணியாளர்களுக்கு கட்டாயப்பயிற்சி; தேவைக்கேற்ற புத்தாக்கப் பயிற்சிகள் (தகவல் அறியும் உரிமை சட்டம், மின் ஆளுமை, இணைய பாதுகாப்பு, போன்றவை) அளிக்கப்படுகின்றன. பொதுப்பணிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சிப்பெற ஏதுவாக தமிழக இளைஞர்களுக்கு இத்துறையால் ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.